செய்தி ஆர்.ராஜா
ஷா ஆலம், செப். 1- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு திறனை மேம்படுத்த உதவும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று இங்குள்ள செக்சன் 21, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அரங்கில் நடத்தப்பட்ட இந்த கோத்தா கெமுனிங் தொகுதி சுழல் கிண்ணப் போட்டியில் தொகுதியிலுள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 12 குழுக்கள் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை இளம் பிராயத்திலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு விளையாட்டு கிளப்புகள் வாயிலாக உரிய பயிற்சிகளை வழங்கி மலேசிய விளையாட்டு மன்றத்தின் வழி அவர்களை அடுத்த நிலைக்கு தயார் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
முதன் முறையாக இந்த போட்டியில் பள்ளிகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டது ஊக்க்கமளிக்கும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தாண்டும் 15 வயதுக்கும் குறைந்த மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இப்போட்டியை விரிவான அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் சொன்னார்.
இந்த போட்டியில், தனது கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள எமரால்டு தமிழ்ப்பள்ளி, ஹைக்கோம் தமிழ்ப்பள்ளி மற்றும் சீபீல்டு தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்றும் கலந்து கொண்டது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர், இதன் மூலம் அப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் திறனையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்வதற்கு மற்ற இன மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.
இப்போட்டியில் கோத்தா கெமுனிங் தேசியப் பள்ளி முதல் இடத்தையும் புக்கிட் ரீமாவ் தேசியப் பள்ளி இரண்டாம் இடத்தையும், கோத்தா கெமுனிங் தேசியப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற குழுக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வெற்றிக் கோப்பை. ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் ஷா ஆலம் மாநகர்மன்ற உறுப்பினர்கள் ராமு நடராஜன், திருமதி லோகேஸ்வரி சுவாமிநாதன், நத்தின்ட்ரன் ராஜ், இந்திய சமூகத் தலைவர்கள் கோபி. மா. நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.








