ஷா ஆலம், செப் 1- ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளர் ஒருவர் ‘காதல் மோசடி‘ கும்பலிடம் 19 லட்சத்து 80 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
புக்கிட் ஜெலுத்தோங்கில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய மாதுவிடமிருந்து நேற்று முன்தினம் மாலை 4.10 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
பொட்டலம் ஒன்றைப் பெறுவதற்காக மோடிக் கும்பலின் உத்தரவுக்கேற்ப அந்த மாது கடந்த மே மாதம் தொடங்கி 12 பரிவர்த்தனைகள் மூலம் 12 வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக அவர் சொன்னார்.
இத்தகைய மோசடிக் கும்பல்களை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொண்ட அவர், சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும் அனாமதேய நபர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
சமூக ஊடங்கள் வழி அறிமுகம் ஆகும் நபர்களை எளிதில் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முன்னர் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை https:// semakmule.rmp.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளுங்கள் என அவர் அறிவுரை கூறினார்.








