ஷா ஆலம், ஆக. 28- ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் திருமதி லோகேஸ்வரி சாமிநாதன் ஏற்பாட்டில் தாய்மார்களுக்கான பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.
இங்குள்ள மாநகர் மன்றத்தின் 14வது மண்டல அலுவலகத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தொடக்கி வைத்தார்.
பிறந்து ஒரு மாதம் தொடங்கி 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளைப் பராமரிப்பது குறித்த வழிமுறைகளை தாய்மார்களுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் 30 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், குழந்தைகளை இளம் பிராயம் முதல் மிகுந்த அக்கறையுடன் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கிலான இந்த பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது என்று சொன்னார்.
இந்தப் பயிற்சி பிள்ளைகளை முறையாக வளர்ப்பது குறித்த விஷயங்களை மட்டுமின்றி தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதற்கும் அவர்களை பயிற்றுவிப்பதற்கும் தேவையான அனுபவங்களையும் பெற்றோர்களுக்கு வழங்குகிறது என்று அவர் கூறினார்.
இதனிடையே, குழந்தை வளர்ப்பு தொடர்பான சரியான புரிதலை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை தாங்கள் ஏற்பாடு செய்ததாக மாநகர் மன்ற உறுப்பினர் லோகேஸ்வரி கூறினார்.
அண்மைய காலமாக குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளை முறையாக பராமரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை இளம் பிராயத்திலே கண்டறிந்து தேவையான சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் அவர்களை குணப்படுத்துவதற்குரிய வாயப்பு கிட்டும் என அவர் சொன்னார்.
சட்டமன்ற சேவை மையத்தின் ஆதரவோடு மாநகர் மன்றத்தின் 14வது மண்டலம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சிப் பட்டறையில் 30 பெண்கள் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.








