கோலாலம்பூர், ஆக 28- செர்டாங் ரயில் நிலையம் (கே.டி.எம்.) அருகே உடலில் தீக்காயங்களுடன் ஆடவர் சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
பலியான அந்நபர் இந்தோனேசியாவைச் சேர்ந்த 43 வயதான உடிகலிபான் என்பது சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது என்று செர்டாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.
கே.டி.எம். செர்டாங் அருகே சுரங்கப் பாதைக்குப் பிறகு உள்ள யு திருப்பத்தில் புதருக்குள் சடலம் கிடப்பது குறித்து உள்ளூர் பெண் ஒருவர் நேற்று காலை 11.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆடவர் உடலைக் கண்டனர். ஆனால் அந்த உடல் முழுமையாக எரியவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அன்பழகன் தெரிவித்தார் .
இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த தாங்கள் முயன்று வருவதாகக் கூறிய அவர், காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.








