ஷா ஆலம், ஆக. 28- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 6 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை மதிப்பீட்டு வரியாக செலாயாங் நகராண்மைக் கழகம் வசூலித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதலாம் தவணை காலத்தில் 5 கோடியே 52 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் இரண்டாம் தவணை காலத்தில் 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் வசூலிக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் ஷஹ்மான் ஜலாலுடின் கூறினார்.
நிலுவையில் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி வரித் தொகையில் 76 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி இக்காலக்கட்டத்தில் வசூலிக்கப்பட்டது என்று நேற்று மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் சொன்னார்.
கடந்த ஜூலை முதல் தேதி வரை வழங்கப் பட்ட தடுப்பு ஆணைக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சொத்துகளுக்கு சீல் வைக்கும் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நகராண்மைக் கழகம் தொடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் வாயிலாக 837 சொத்து உரிமையாளர்களுக்கு எதிராக பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில் முதலாம் தவணைக்கான மதிப்பீட்டு வரி தொடர்பில் 220,490 உரிமையாளர்களின் கணக்குகள் பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மொத்தம் 67,059 மதிப்பீட்டு வரி பில்கள் மின்னஞ்சல் வாயிலாகவும் மேலும் 36,753 பில்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் இரண்டாம் தவணைக்கான வரியைச் செலுத்துவதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.








