குளுவாங், ஆக. 28- இங்குள்ள தாமான் ஸ்ரீ லம்பாக்கில் வெடிகுண்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் வெடிகுண்டு அழிப்புப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ்காரர்கள் மண்ணில் புதையுண்ட னர்.
இந்த விபத்தில் படு காயங்களுக்குள்ளாகி இங்குள்ள என்ச்சே பெசார் ஹாஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவ்விருவரும் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
முப்பத்தொன்பது வயதான கார்ப்ரல் அப்துல் ஹலிம் ஜைனாலுக்கு இடுப்பு எலும்பு மற்றும் மூன்று விலா எலும்புகள் முறிவு கண்டுள்ள வேளையில் 34 வயதான கார்ப்ரல் முகமது ஃபாருகி ஷம்சாரிக்கு தொடை மற்றும் விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
ஏரியல் 500 எல்பிஎஸ் 1952 ரக வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அவ்விரு காவலர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் பணியில ஈடுபட்டிருந்த போது குழியின் மண்சுவர் சரிந்து அவ்விருவரும் அதில் சிக்கிக் கொண்டதாக அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.








