பண்டார் ஸ்ரீ பகவான், ஆக. 27- புருணை சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா உடனான தனிப்பட்ட அணுக்கமான நட்புறவு மிகவும் பொருள் பொதிந்ததாக உள்ளதாகக் கூறிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த நட்புறவை சரியான முறையில் பேணிக் காப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியாவுடன் தாம் கொண்டுள்ள அணுக்கமான உறவின் வெளிப்பாடாகக் கடந்த 2022ஆம் ஆண்டு தாம் பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களுக்குப் பின்னர் எந்த அதிகாரப்பூர் அழைப்பு இன்றி சுல்தான் கோலாலம்பூர் வந்தது கண்டு தாம் மனம் நெகிழ்ந்து போனதாக அவர் சொன்னார்.
மலேசியா மற்றும் புருணை நாட்டுத் தலைவர்களின் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவு அவ்விரு அண்டை நாடுகளுக்கிடையிலான அரச தந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் பெரிதும் துணை புரியும் என அன்வார் குறிப்பிட்டார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் நாட்டின் பத்தாவது பிரதமராகக் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா அதே ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மலேசியாவுக்கு வருகை புரிந்தார்.


