MEDIA STATEMENT

எல்.ஆர்.டி.3 கேபிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு- ஐந்து கட்டுமானப் பணியாளர்கள் கைது

3 ஆகஸ்ட் 2024, 2:14 AM
எல்.ஆர்.டி.3 கேபிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு- ஐந்து கட்டுமானப் பணியாளர்கள் கைது

கோலாலம்பூர், ஆக 3 - இலகு ரயில்  3 (எல்.ஆர்.டி. 3) கட்டுமான தளத்தில் கேபிள் எனப்படும் மின்கம்பிகளை கொள்ளையிட்டு வந்தக்   கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவங்கள்  தொடர்பில்  நேற்று முன்தினம் மூன்று கட்டுமானத் தளங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார்  ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஐந்து தொழிலாளர்களை கைது செய்தனர்.

அந்த ஐவரும்  ஷா ஆலம் மற்றும் டாமன்சாராவில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை  மேற்கொள்ளப்பட்டச் சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

ஷா ஆலம் செக்சன் 2இல் உள்ள  ஜாலான் பெர்சியாரான் ராஜா மூடா,  செக்சன் 14,  பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் காயு ஆரா டாமன்சாரா ஆகிய இடங்களிலுள்ள எல்.ஆர்.டி. 3 கட்டுமான தளங்களில் இச்சோதனை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு நிசான் சென்ட்ரா வாகனம், ஒரு சாவி மற்றும் ஆறு கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

கைதான சந்தேக நபர்கள் எல்.ஆர்.டி. 3 திட்ட குத்தகையாளரிடம் பணிபுரிந்தது வந்த அவர்களுக்கு  கட்டுமான தளங்களுக்கு நுழைவதற்கான அனுமதி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இந்தக் கும்பல் வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி கட்டுமானத் தளங்களிலிருந்து கேபிள்களைத் திருடுவது வழக்கமாகும். திருடப்பட்ட  கேபிள்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு கிள்ளான் வட்டாரத்திலுள்ள  உலோகக் கடைகளில் விற்கப்பட்டன என்று சுஹைலி கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக செயல்பட்டு வந்த  இக்கும்பலால் உரிமையாளர்களுக்கு 25 லட்சத்து 6 ஆயிரத்து 500வெள்ளி வரை  இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஷா ஆலம் மற்றும் கிள்ளானில் உள்ள  எல்.ஆர்.டி. திட்ட உரிமையாளர்கள் இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் குறித்து 15 போலீஸ் புகார்களை அளித்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

சந்தேக நபர்கள் இப்போது ஷா ஆலம் மத்திய லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு  431ஏ  மற்றும் பிரிவு 379 இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.