MEDIA STATEMENT

சமயப் பணிகளோடு சமூகப் பணியும் ஆற்றுவீர்- நிதி பெற்ற ஆலயங்களுக்கு பாப்பா ராய்டு கோரிக்கை

25 ஜூலை 2024, 1:56 PM
சமயப் பணிகளோடு சமூகப் பணியும் ஆற்றுவீர்- நிதி பெற்ற ஆலயங்களுக்கு பாப்பா ராய்டு கோரிக்கை

செய்தி. R. ராஜா

 

ஷா ஆலம், ஜூலை 25- மாநில அரசிடமிருந்து மானியம் பெற்ற ஆலயங்கள் சமய வளர்ச்சிக்கான நடவடிக்கைகளோடு வட்டார மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.

தங்கள் பகுதிகளில் உள்ள மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காகக் கொண்டு உதவித் திட்டங்களை ஆலயங்கள் அமல்படுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் சிறிய அளவில் செய்யும் இத்தகைய உதவிப் பணிகள் வாயிலாக சமூகத்திற்கான ஆலயங்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும் என்பதோடு சம்பந்தப்பட்ட ஆலயங்கள் மேலும் வளர்ச்சி காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பா ராய்டு, முறையான சமயநெறி களுடன வழி நடத்தப்படும் ஆலயங்கள் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதே சமயம், இந்த ஆலயங்கள் மக்களின் சுய ஒழுக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படையாகவும் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாகவும் விளங்குகின்றன எனக் கூறினார்.

சில வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளும் நடவடிக்கைகளும் ஆன்மீக நெறிக்கு முரணாகவும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்த அவர்,  மலேசிய இந்து சங்கத்தின் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என  கேட்டுக் கொண்டார்.

பல ஆலயங்களில் உட்கட்சிப் பூசல், முறையான பதிவு இல்லாமை  உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவுவதைக் சுட்டிக்காட்டிய அவர், அதனைக் களைவதற்கு ஏதுவாக ஆலயங்களை சங்கப் பதிவகத்திடம் முறையாகப் பதிவு செய்வது, அரசாங்க மானியங்கள் முறையாகப் பெறுவது தொடர்பில்  இன்று சிறப்பு விளக்கமளிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அவர் சொன்னார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.