மலேசியா- உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பின் வழி மகத்தான வாய்ப்புகள்- பிரதமர் பெருமிதம்

19 மே 2024, 5:56 AM
மலேசியா- உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பின் வழி மகத்தான வாய்ப்புகள்- பிரதமர் பெருமிதம்

சமர்காண்ட், மே 19- மலேசியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த வாய்ப்புகளின் வழி இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வாய்ப்புகளை நவீனப்படுத்தவும் உருமாற்றவும் இயலும் என்பதோடு முதலீடுகளையும் ஈர்க்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அந்நிய நாடுகளின் முதன்மை நிறுவனங்களின் அபரிமிதமான முதலீடுகளின் வாயிலாக செமிகண்டக்டர் நுண்சில்லு தயாரிப்பு மையமாக மலேசியா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உருவெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

நமது எதிர்கால ஆற்றல் மற்றும் துரித வளர்ச்சி கண்டு வரும் பொருளாதார சக்திகளுக்கு மத்தியில் சுய பலத்தை உருவாக்குவதில் நமக்குள்ள திறன் ஆகியவற்றின் பிரதிபலிப்புதான் மலேசியாவும் உஸ்பெகிஸ்தானும் என்று நேற்று இங்குள்ள சில்க் ரோட் சமர்கண்ட் காம்ப்ளெக்சில் மலேசிய-உஸ்பெகிஸ்தான் வர்த்தக ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வரங்கில் மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  உஸ்பெகிஸ்தான் துணைப் பிரதமர் ஜம்ஷிட் கோட்ஜாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

இரு நாடுகளும் இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்றம் மற்றும் ஹலால் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை நாம் வலுப்படுத்த வேண்டும். வர்த்தக நடைமுறைகளை நாம் எளிதாக்கலாம் என அவர் மேலும் சொன்னார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம் 45 கோடியே 11 லட்சம் வெள்ளியாக இருந்தது. அந்த தொகையில் உஸ்பெகிஸ்தானுக்கான ஏற்றுமதி 44 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியையும் இறக்குமதி 19 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியையும் உட்பட்டுத்தியிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.