ஈப்போ, மே 19- பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 29 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 169 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேராக இருந்தது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக தைப்பிங் மாவட்டத்தில் நான்கு துயர் துடைப்பு மையங்களும் கோல கங்சாரில் ஒரு மையமும் இன்னும் திறக்கப்பட்டுள்ளன என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.
தைப்பிங் மாவட்டத்தில் துரோங், பத்து அம்பார் சமூக மண்டபம், மாத்தாங் தேசிய பள்ளி, கம்போங் சுங்கை பத்து துரோங் சமூக மண்டபம், தெமர்லோக் தெரோங் தேசிய பள்ளி ஆகிய நிவாரண மையங்களில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.
கோல கங்சார் மாவட்டத்தின் கம்போங் தாலாங் மஸ்ஜிட் சமூக மண்டபத்தில் எழு குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, நிலச்சரிவு காரணமாக குப்பாங்-கிரீக்-ஜெலி நெடுஞ்சாலை மற்றும் பெல்டா துரேலாக் செலாத்தான் சாலை ஆகியவற்றில் ஒரு தடம் மற்றும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.



