போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பில் சிங்கை பிரஜை யாரும் கைது செய்யப்படவில்லை- ஐ.ஜி.பி. விளக்க

19 மே 2024, 4:46 AM
போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பில் சிங்கை பிரஜை யாரும் கைது செய்யப்படவில்லை- ஐ.ஜி.பி. விளக்க

கோலாலம்பூர், மே 19- ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உள்நாட்டினர் என்பதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெளிவுபடுத்தினார்.

ஊடகங்களில் செய்தி வெளியிட்டதைப் போல் இச்சம்பவம் தொடர்பில் சிங்கப்பூரர்கள் யாரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இந்த தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நேற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 19 முதல் 62 வயது வரையிலான அனைவரும் உள்நாட்டினர் என்பதோடு ஊடகச் செய்திகள் கூறுவது போல் இதில் சிங்கை பிரஜைகள்  யாரும் சம்பந்தப்படவில்லை என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

அந்த போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான எழுவரும் வரும் மே 24ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஐவர் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். சம்பவத்தின் போது அந்த போலீஸ் நிலையத்தில் இருந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு  உயர்கல்விக்கூட மாணவர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் விடியற்காலை 2.45 மணியளவில் பாராங்கத்தியேந்திய முகமூடி ஆசாமி நடத்திய தாக்குதலில் கான்ஸ்டபில்களான அகமது அஸ்ஸா ஃபாஹ்மி அஸார் (வயது 22) மற்றும் முகமது ஷபிக் அகமது சைட் (வயது 24) ஆகியோர் மரணமடைந்தனர். 

இச்சம்பவத்தில் துப்பாக்கிக்ச் சூட்டுக்கு ஆளான கார்ப்ரல் முகமது ஹஸிப் ரோஸ்லான் ஜோகூர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.