உலு சிலாங்கூர், மே 1- பொது மக்களின் வசதிக்காக கோல குபு பாருவில் பொதுப் போக்குவரத்து குறிப்பாக, பேருந்து சேவை மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு வசதியாக பேருந்து சேவைகளை அதிகரிக்கும் பணியில் ஒற்றுமை அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருகிறது என்று அந்தோணி லோக் கூறினார்.
உதாரணமாக, கோல குபு பாருவில் உள்ளதைப் போல நகரங்கள் புதிய நகரங்கள், கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை கிள்ளான் பள்ளத்தாக்கு டன் பயணிகள் இரயில் மூலம் இணைக்கக்கூடிய பேருந்து சேவை தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அந்த காரணத்திற்காக, நாங்கள் இங்குள்ள பொது வசதிகளை மேம்படுத்தவதில் கவனம் செலுத்த முயற்சிப்போம். தற்போதுள்ள அரசின் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த முயற்சி இன்னும் எளிதாகும் என்றார் அவர்.
இன்று கோல குபு பாரு ஒற்றுமை அரசின் வேட்பாளர் பாங் சாக் தாவுடன் நடைப் பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பானில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவுடன் அப்பகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரப் பணிகள் சுமூகமாக நடப்பதாக ஜசெக பொதுச் செயலாளரான லோக் கூறினார்.
இத்தொகுதியை தக்கவைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையை தாங்கள் கொண்டுள்ளதாக கூறிய அவர், எளிதாக வெற்றி பெறுவோம் என்ற மமதையில் இருப்பது அல்லது எதிராளியின் திறன்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்படும் என்றார்.
நாங்கள் தெரிவிக்க விரும்புவது நிலையான அரசியல் மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகும். நாங்கள் கோல குபு பாருவில் வெற்றி பெற முழுமையாக பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.








