செய்தி சு.சுப்பையா
கோலக் குபு பாரு .ஏப்.27- ஒற்றுமை அரசின் சார்பில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் காலை 8.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது. மடாணி அரசின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, ஜ.செ.க.வின் பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லொக் ஆகியோர் அணிவகுப்புக்கு தலைமை தாங்கினர்.
மடாணி அரசின் பங்காளி கட்சிகளான பி.கே.ஆர், ஜ.செ.க., அமானா ஆகிய கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் தொண்டர்களும் காலை 7.00 மணி முதல் கோலக் குபு பாருவில் உள்ள எக்ரோ வங்கிக்கு அருகில் ஒன்று கூடத் தொடங்கினர்.
இதே போல் மடாணி அரசின் மற்றொரு கூட்டணியான அம்னோ, ம.இ.கா., ஐ.பி.எப், மை பி.பி.பி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் அணி திரண்டனர்.
கோலக் குபு பாருவைத் தற்காப்போம் என்ற முழக்கம் தொடர்ந்து முழங்கியது. அணிவகுப்பு வேட்பு மனு தாக்கல் மண்டபத்தை அடையும் முன் சற்றுத் தொலைவில் நிறுத்த பட்டது. அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும் புவான் பாங் உடன் வேட்பு மனு தாக்கல் மையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
ஆரவாரத்துடன் அணிவகுப்பு நடைபெற்றது. மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன அணிவகுப்பும் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி சார்பில் நடைபெற்றது.
நம்பிக்கை கூட்டணியின் சிவப்பு வர்ணமும் தேசிய முன்னணியின் நீல வர்ணமும் பேராணியில் கலைக் கட்டியது.
அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது, அமைச்சர் கோபிந் சிங் டியோ, துணை அமைச்சர் குலசேகரன், துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், ஆர்.எச்.என். ராயர், கணபதி ராவ், பாப்பா ராய்டு, கோத்த கொமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மேலும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
காலை 8.45 மணிக்கு வந்தடைந்த பேரணி தற்போது வேட்பு மனு மையத்திற்கு சற்றுத் தொலைவில் காத்திருக்கின்றது.
காவல்துறையினர் பாதுகாப்பு வேலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பைப் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளதாக அறியப்படுகிறது.








