ஜோகூர் பாரு, ஏப் 9 - அண்மையில் ஜோகூர் பாருவில் இணைய முதலீட்டு மோசடியில் சிக்கி ஓய்வு பெற்ற பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் 10 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 61 வயதான அந்த நபர் கடந்த மார்ச் 22ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்ததாக ஜோகூர் மாநில காவல் துறை தலைவர் எம். குமார் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட கோல்ட் ஃபியூச்சர்ஸ் XAUUSD எனப்படும் முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பிறகு, புலனத்தின் மூலம் நபர் ஒருவருடன் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த முதலீட்டைப் பற்றிய விளக்கங்களை அளித்த அந்த நபர், முதலீட்டூ பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் மூலதனத் தொகையில் இருந்து ஐந்து முதல் எட்டு சதவிகிதம் வரை வருமானம் அன்றைய தினமே தரப்படும் என உறுதியளித்துள்ளார் என்றார் அவர் .
இதனை நம்பி பல வங்கி கணக்குகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலுத்திய பாதிக்கப்பட்ட நபர், எந்த லாபத்தையும் திரும்பப் பெறத் தவறியதால் தான் ஏமாற்றப்பட்டு இருக்கக்கூடும் என சந்தேகத்திற்குள்ளானார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த மோசடி வழக்கு குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளையில் சமூக ஊடகங்களில் வெளிவரும் முதலீட்டுச் சலுகைகள் தொடர்பான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் குமார் அறிவுறுத்தினார்.
இத்தகைய முதலீட்டு வாய்ப்புகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த பேங்க் நெகாரா மலேசியா மற்றும் பங்குச் சந்தை ஆணையம் போன்ற ஏஜென்சிகளை அவர்கள் தொடர்பு கொண்டு சரிபார்க்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.








