கோலாலம்பூர், ஏப் 7- அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ள கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்ய பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) தலைமை இன்று கூடுகிறது.
நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற ஹராப்பான் கூட்டத்தின் போது மகளிர் பிரிவு பிரதிநிதிகள் உட்பட பல பெயர்கள் பரிசீலனைக்கு முன்மொழியப் பட்டதாக ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக விரைவில் முடிவு (வேட்பாளரை இறுதி செய்வது) எடுக்கப்படும் என நம்புகிறோம். எனினும், இப்போதைக்கு அது விவாத நிலையில் மட்டுமே உள்ளது. இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது. அது ஹராப்பான்-பெர்பாடுவானை பிரதிநிதிக்கும் ஜசெகவின் வேட்பாளர் என்று சிலாங்கூர் மாநில ஜசெக தலைவருமான அவர் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்லும்#IkhlasMYNIC சினாரி ரம்ஜான் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இலக்கவியல் அமைச்சருமான அவர் இதனைத் தெரிவித்தார்
கோல குபு பாரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு மே 7 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தெரிவித்தார்.
ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று நோய் காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ, கடந்த 2013 முதல் மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
கடந்த 2022 இல் நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப்
பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.
கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.








