செய்தி.சு.சுப்பையா
கோலக்குபு பாரு. மார்ச்.30- கோலக் குபு பாருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 5வது திருக்குட நன்னீராட்டு பெருவிழா 3,000 பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பராயிடு முன்னிலையில் நடைபெற்றது.
67 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் 5வது முறையாக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இந்த ஆலயத்தில் திருப்பணி வெற்றியடைய கொடை நெஞ்சர் ஓம்ஸ் பா.தியாகராஜன் ரி.ம. 130,000.00 நன்கொடையாக வழங்கியுள்ளார். வடக்கு வாசல் ராஜகோபுரம் திருப்பணிக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் முழு செலவையும் ஏற்றுக் கொண்டார் என்று ஆலயத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆலயத்தில் திருப்பணி கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதல் நிதியாக ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ மோகன் ரி.ம. 10,000.00 கொடுத்து அதிகார்வப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிதி திரட்டும் பணி தீவிரமாக செயல் பட்டு இன்று வெற்றி அடைந்துள்ளது.
இதே போல் மடானி அரசின் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சிலிருந்து ரி.ம. 127,000.00 நிதியுதவி கிடைத்தது. ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநில அரசும் நிதியுதவி செய்து வருகிறது. இந்தத் திருப்பணிக்கு சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 20,000.00 வழங்கியது. இதே போல் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமரர் லி கி ஹியொங் ரி.ம. 10,000.00 வழங்கியுள்ளார்.
இவ்வட்டாரத் தொழில் அதிபர்களில் ஒருவரான டத்தோ ஸ்ரீ எஸ்.குமரேசன் ரி.ம. 60,000.00 வழங்கினார். டத்தோ ஆனந்த ரட்சகன் ரி.ம. 50,000.00, டத்தோ பி.எஸ்.சாமி 20,000.00, நவநீதம் சுப்பையா ரி.ம. 28,000.00 நன்கொடையாக வழங்கினர்.
இவ்வட்டாரப் பொது மக்களும் தொழில் அதிபர்களும் வழங்கிப் பேராதரவினால் ஓர் ஆண்டில் வெற்றிகரமாகத் திருப்பணி நிறைவு பெற்று 5வதாக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் நடை பெற்றது என்று ஆலயத் தலைவர் பாலசந்திரன் வெற்றிப் பூரிப்புடன் தெரிவித்தார்.
திருக்குட நன்னீராட்டு விழாவில் கொடை நெஞ்சர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது பிரதிநிதியாக ஓம்ஸ் அற வாரியத்தின் துணைத் தலைவர் திலகன் கலந்து கொண்டார். அவருடன் இவ்வட்டார அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக இந்தியப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்மாவட்டப் போலீஸ் படையின் இந்து உயர் அதிகாரிகள், மாவட்ட மன்ற இந்து உயர் அதிகாரிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இவ்வாலயத்திற்கு நியு மலாயா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் வி.தட்சணாமூர்த்தி மாதந்தோறும் மின்சாரக் கட்டணச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொருவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டு நிதியுதவி செய்தனர்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு சிறப்பு பூசை நடைபெறவிருக்கிறது. இந்தப் பூசையில் கொடை நெஞ்சர்கள் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று ஆலயத் தலைவர் பாலசந்திரன் கேட்டுக் கொண்டார்.
1961 ஆம் ஆண்டு ஒன்று கூடி இந்த ஆலயத்தை நிறுவிய அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அரசு அதிகாரிகள் கொடுத்து வரும் உதவிக்கும் நன்றி கூறிக் கொண்டார்.



