கோலாலம்பூர், மார்ச் 30- இங்குள்ள ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 6 கைத்துப்பாக்கிகளுடன் இஸ்ரேலிய நபர் ஒருவரை போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
36 வயதுடைய நபர் பிரஞ்சு கடப்பிதழைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து (யுஏஇ) இருந்து கடந்த மார்ச் 12 ஆம் தேதி மலேசியாவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
இஸ்ரேலிய கடப்பிதழையும் வைத்திருக்கும் சந்தேக நபர் குடும்பப் பிரச்சினைகளைத் தொடர்ந்து சக நாட்டு பிரஜையைக் கொல்வதற்காக மலேசியா வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த ஆடவரை கைது செய்தபோது போது ஆறு கைத்துப்பாக்கிகளை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. அவற்றில் மூன்று துப்பாக்கிகளில் தோட்டா நிரப்பப்பட்டிருந்தது. மேலும் 200 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் நடக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நாங்கள் பாதுகாப்பு விஷயத்தில் விழிப்புடன் இருக்கிறோம். மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான பாதுகாப்பை அதிகரிக்கிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக அவர், புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் பொது ஒழுங்குத் துறை ஏற்பாடு செய்த நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் மலேசியாவில் பெறப்பட்டவை என நம்பப்படுவதாக கூறிய அவர், அந்த நபருக்கு நாட்டில் தொடர்புகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சந்தேக நபர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டாரா என வினவியபோது, இது தொடர்பில் போலீஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர் மார்ச் 31 வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடப்பிதழ் சட்டத்தின் பிரிவு 12 மற்றும் துப்பாக்கிச் சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.



