ஷா ஆலம், மார்ச் 25: கின்றாரா தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் (எஸ்.ஜே.கே.டி.) நிலத்தை சாலை விரிவாக்கத்திற்காக எடுக்க வேண்டாம் என்று கோலாலம்பூர் மாநகர மன்றம் மற்றும் பிராந்திய குடியிருப்பு வீட்டு வசதி மேம்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
கின்றாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறுகையில், இரு தரப்பினரும் 700 மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, சிறந்த மற்றும் பொறுப்பான தீர்வைக் காண வேண்டும் என்றார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பள்ளி நில மீட்பு நடக்காமல் இருக்க, தொடர் நடவடிக்கைக்காக மலேசியக் கல்வி அமைச்சகத்தையும் தொடர்பு கொள்ள அவர் வலியுறுத்தினார்.
"கின்றாரா சட்டமன்றம் மேம்பாட்டாளரின் முடிவை ஒருபோதும் ஏற்கவில்லை. இந்த SJKT லாடாங் கின்றாரா 1946 முதல் அங்கு இருக்கிறது. ஆனால் 1974 இல் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு அப்பள்ளி அங்குள்ளதை, பள்ளி நிலத்தின் மீது உரிமைக் கொண்டாடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப் “பள்ளியின் ஒரு பகுதியின் மீது கூட்டரசு பிரதேச எல்லைக் கோடு அமைக்கப்பட்டுள்ளது, இந்த நில விவகாரத்திற்கான முக்கிய காரணம் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளியை அடுத்து 1,600 வீடுகளை உள்ளடக்கிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு DBKL ஒப்புதல் அளித்துள்ளது அதற்கான சாலை அமைப்பில், அதாவது ஜாலான் கின்றாரா மாஸின் நான்கு வழிப் பாதையால் பள்ளிக்கு பாதகம் விளைந்ததாக கூறிய அவர்.
இருப்பினும், 2020 இல் தொடங்கிய திட்டமிடலின் படி, மேம்பாட்டாளர் நான்கு வழி சாலையை அமைக்க வேண்டும். அப்படி விரிவுபடுத்தினால் பள்ளியின் நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்த வேண்டும்.
"ஆனால் டிபிகேஎல் தலைமையகத்தில் 7 டிசம்பர் 2023 அன்று நடந்த கூட்டத்தில், சாலையை மூன்று வழிகளாக மட்டுமே மேம்படுத்த மேம்பாட்டாளரை அனுமதித்தது. இதனால் பள்ளியின் சொத்துக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
"எனவே, ஏப்ரல் 1, 2024 அன்று பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற மேம்பாட்டாளர் கோரிக்கை ஆச்சரியமாக இருக்கிறது. 700 மாணவர்களின் தேவைகள் மற்றும் நலனில் அக்கறை கொள்ளுமாறு மேம்பாட்டாளர் மற்றும் DBKL ஐ கேட்டுக் கொள்வதாக" கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.








