புத்ராஜெயா, மார்ச் 16- நாடு முழுவதும் ரம்ஜான் சந்தைகளில் உணவில் விஷம் கலந்த சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு இதுவரை எந்த புகாரையும் பெறவில்லை என்று அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
ரம்ஜான் மாதத்திற்கு முன்னதாக உணவு வளாக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு கையாளுதல் குறித்து 183 விளக்க நிகழ்வுகளை சுகாதார அமைச்சு கடை உரிமையாளர்களுக்கு நடத்தியதன் விளைவாக கிடைத்த பலன் இதுவாகும் என்று என்று அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி தொடங்கிய இந்த விளக்கமளிப்பில் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,299 ரம்ஜான் சந்தைகளில் பங்கேற்றுள்ள 70,334 கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இது (உணவில் விஷத்தன்மை இல்லாதது ) ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. ஏனென்றால் பிப்ரவரி முதல் நாங்கள் முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கினோம். உணவு உரிமையாளர்கள் மற்றும் உணவைக் கையாள்வோருக்கு தகவல் மற்றும் பயிற்சி நிகழ்வுகளை நடத்தினோம் என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு 2024 ரம்ஜான் சந்தை உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ரம்ஜானுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஐஸ் தொழிற்சாலைகள் உட்பட 324 உணவு தயாரிப்பு வளாகங்களில் சுகாதார அமைச்சு ஆய்வு செய்தது.
உணவு வளாகங்கள் மீதான சோதனையில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற இப்தார் பஃபே வழங்கும் வளாகங்களும் உள்ளடங்கியுள்ளன என்றார் அவர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு புத்ராஜெயா ரம்ஜான் சந்தைகளில் உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்துகளைப் பெற சுகாதார அமைச்சு கியூ.ஆர். குறியீடுகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.



