போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக்கிற்குத் தூக்குத் தண்டனை

8 மார்ச் 2024, 10:05 AM
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக்கிற்குத் தூக்குத் தண்டனை

தாவாவ், மார்ச் 8 - போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மெக்கானிக் ஒருவருக்கு  இங்குள்ள உயர்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

அரசுத் தரப்பின் வழக்கிற்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் 51 வயதான டாய் சீ கியோங் என்ற அந்நபருக்கு  நீதிபதி டத்தோ லிம் ஹாக் லெங் இத்தண்டனையை வழங்கினார்.

இது, குற்றம் சாட்டப்பட்டவரின் முதல் குற்றம் என்றாலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு சபாவில் மிகப்பெரியது என நம்பப்படுகிறது என்று   நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த  நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஐந்து போதைப்பொருள் வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட அளவைவிட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போதைப்பொருளின் அளவு அதிகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது அவரின் வழக்கறிஞர் எந்த வருத்தமும் காட்டவில்லை. பதிலளிக்கவும் இல்லை. தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு ஏதாவது சொல்ல நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியபோதிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக, துணை பப்ளிக் புரோசிகியூட்டர்  ஹர்மன் ஹுசைன், சம்பந்தப்பட்ட போதைப்பொருள்களின் எண்ணிக்கை மற்றும் பொது நலன் ஆகியவற்றைக் கருத்தில்  கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு  மரண தண்டனையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு  செப்டம்பர் 6ஆம் தேதி  காலை 7.30 மணிக்கு கம்போங் பத்து பாயுங்கில் 200 கிலோ ஷாபு போதைப் பொருளைக் கடத்தியதாக டாய் மீது கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி    குற்றம் சாட்டப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.