ஷா ஆலம், மார்ச் 7 - இவ்வாண்டு மத்தியில் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படும் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி
நிரலில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்.1) மத்திய
தவணைக்கான மறுஆய்வை தாக்கல் செய்வது உள்ளிட்ட அங்கங்கள்
இடம் பெறவுள்ளன.
மாநில சட்டமன்றத்தில் இன்று பதினைந்தாவது சட்டமன்றத்தின்
இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும்
தீர்மானம் மீது உரையாற்றிய போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி இதனைக் கூறினார்.
இறைவன் அருளால், இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலின் அனைத்து
அங்களையும் முழுமையாக முடித்து விட்டோம். உறுப்பினர்களின்
வாதங்களையும் விவாதங்களையும் அவற்றுக்கு ஆட்சிக்குழு
உறுப்பினர்கள் அளித்த பதில்களையும் நாம் கேட்டறிந்தோம்.
அடுத்த கூட்டத்தில் மேலும் பல விஷயங்கள் மீது கவனம்
செலுத்தவுள்ளோம். அதில் முதலாவது தேர்வுக் குழுவை அமைப்பதாகும்.
அதனைத் தொடர்ந்து, முதலாவது சிலாங்கூர் திட்டம் பற்றி கலந்துரையாடப்படும் என்று அவர் சொன்னார்.
இவை தவிர அடுத்த நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் பல விஷயங்களை
வரையறுத்துள்ளோம். அவற்றை விரைவில் இறுதி செய்வோம் என்று
அவர் குறிப்பிட்டார்.
முதலாவது சிலாங்கூர் திட்ட மறுஆய்வை தாக்கல் செய்து அங்கீகரிக்கும்
பணிகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் வரவு
செலவுத் திட்ட தாக்கலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று
அமிருடின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூறியிருந்தார்.
சிலாங்கூர் மக்களுக்கு உயர் வருமானம் கொண்ட வேலை வாய்ப்புகளை
உருவாக்குவது, கிள்ளான், கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம்
வரையிலான இரயில் தடங்களை அமைப்பது உள்ளிட்ட உயர் தாக்கம்
கொண்ட திட்டங்களை அமல் செய்வது மீது இந்த மத்திய தவணைக்கான
மறுஆய்வு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.




