கோலாலம்பூர், மார்ச் 5- கழிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யும் அக்ரோ மடாணி திட்டத்தில் பங்கு கொள்ளும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் குறிப்பிட்ட எந்த மானியத்தையும் வழங்கவில்லை என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இடைத் தரகர் அல்லது மூன்றாம் தரப்பினரின் தலையீடின்றி நேரடி விற்பனை முறையை கடைபிடிப்பதால் பயனீட்டாளர்கள் 10 முதல் 30 விழுக்காடு வரையிலான விலைக் கழிவைப் பெறுவதற்கு விவசாயிகளும் வர்த்தர்களும் லாபம் பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டுகிறது விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணையமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குருப் கூறினார்.
2023 மற்றும் 2024 காலக்கட்டத்தில் மொத்தம் 10,000 அக்ரோ மடாணி விற்பனைத் திட்டங்களை நடத்தும் இலக்கை அடைவதற்காக இவ்வாண்டில் 5,000 விற்பனைகளை நடத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கூடுதலாக, அமைச்சும் இதர அரசு நிறுவனங்களும் ரஹ்மா மலிவு விற்பனை, மடாணி கூட்டுறவு விற்பனை போன்ற இதர வகையான மலிவு விற்பனைகளை நடத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பெண்டாங் தொகுதி உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார். அக்ரோ மடாணி விற்பனை, ரஹ்மா விற்பனை மற்றும் மடாணி கூட்டுறவு விற்பனைத் திட்டங்களின் வேறுபாடு குறித்தும் இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவித் தொகை குறித்தும் டத்தோ அவாங் கேள்வி எழுப்பியிருந்தார்.
அக்ரோ மடாணி விற்பனைத் திட்டங்கள் பெரும்பாலும் அதிகமாக பி40 மற்றும் எம்40 தரப்பினர் வசிக்கும் அரசாங்க வளாகங்கள், பண்ணை உற்பத்தி கொள்முதல் மையங்களில் நடத்தப்படுகின்றன. ரஹ்மா விற்பனை பேரங்காடிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. மடாணி கூட்டுறவு விற்பனை கூட்டுறவுக் கழக வளாகங்களில் நடத்தப்படுகின்றன என்று அவர் தெளிவுபடுத்தினார்.








