கோலாலம்பூர், பிப் 17- சீனப்புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 8 முதல் 13 வரை மேற்கொள்ளப்பட்ட 21வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு அல்லது 906 சம்பவங்கள் குறைந்தன.
இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட ஓப் செலாமாட் அமலாக்க காலத்தில் நாடு முழுவதும் மொத்தம் 8,501 சாலை விபத்துகள் பதிவான வேளையில் கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 9,407ஆக இருந்தது என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ முகமது அஸ்மான் அகமது சப்ரி கூறினார்.
இக்காலக்கட்டத்தில் மரண விபத்துகளின் எண்ணிக்கையும் ஒன்று குறைந்து 86ஆகப் பதிவானது. இந்த விபத்துகளில் 91 பேர் உயிரிழந்தனர் கடந்த 19வது ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது நிகழ்ந்த 87 மரண விபத்துகளில் 100 பேர் பலியாகினர் என்று அவர் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்வோர் மத்தியில் மரணச் சம்பவங்கள் அதிகம் பதிவானதாகக் கூறிய அவர், மொத்த மரண எண்ணிக்கையில் 74 விழுக்காடு அல்லது 67 உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளை உள்ளடக்கியிருந்தது என்றார்.
இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற சீனப்புத்தாண்டு ஓப் செலாமாட் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட போலீஸ் தலைமையகங்களை கௌரவிக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கவனக் குறைவாக வாகனங்களைச் செலுத்துவது மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களைப் பின்தொடர்ந்து மிகவும் நெருக்கமாகச் செல்வது, கவனக் குறைவு காரணமாக சொந்தமாக கட்டுப்பாட்டை இழப்பது, அருகில் அல்லது முன்னால் வரும் வாகனங்களை கவனிக்கத் தவறுவது போன்றவை விபத்துகளுக்கு காரணமாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
இந்த 21வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்க காலத்தின் போது 10,715 வாகனங்கள் சாலை விபத்துகளில் சிக்கின. கடந்த 19வது ஓப் செலாமாட் இயக்கத்தின் போது விபத்துகளில் சிக்கிய வாகனங்களின் எண்ணிக்கை 12,414 ஆகும் என்றார் அவர்.








