கோல கங்சார், நவ 29- சுமார் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகளை ஆயுதமேந்திக் கொள்ளையிட்டதாக மூன்று நண்பர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ரோஹைடா இஷாக் முன்னிலையில் தங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை ஆர்.குணசீலன், (வயது 52), ஏ.எஃப். அட்ரியன் ராஜ் டொமினிக், (வயது 29), மற்றும் ஆர்.ஆனந்தன்,(வயது 35) ஆகிய மூவரும் மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி காலை 9.40 மணியளவில் ஜாலான் டத்தோ மஹாராஜா லேலா வாகன நிறுத்துமிடத்தில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகளை 26 வயதான சோங் யோங் செங் மற்றும் டான் காங் சியாட் ஆகிய இருவரிடமிருந்து இன்னும் தலைமறைவாக இருந்து வரும் மேலும் ஆறு பேரும் சேர்ந்து கொள்ளையடித்ததாக அம்மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.
நீதிபதி ரோஹைடா அவர்களை தலா இரு நபர் உத்தவாதத்துடன் 20,000 ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார். ஜாமீன்தாரரில் ஒருவர் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும். என்பதோடு அவர்கள் மாதம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.








