ஷா ஆலம், நவ 10- வெள்ளப் பிரச்சனையைக் கையாள்வதற்காக பல்வேறு அரசு துறைகளை உள்ளடக்கிய சிறப்பு செயல்குழு காஜாங் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.
இந்த செயல்குழுவில் காஜாங் நகராண்மைக் கழகம், வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை, பொதுப்பணி இலாகா மற்றும் மாவட்ட, நில அலுவலகம் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினர் சியோங் கியான் யோங் கூறினார்.
தற்போது வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் சற்று சீரற்றதாக உள்ளது. இத்தகைய செயல்குழுவை அமைப்பதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண விரும்புகிறோம். மாநில சட்டமன்றக் கூட்டம் முடிவுக்கு வந்தவுடன் இந்த செயல்குழு தனது முதலாவது சந்திப்பை நடத்தும் என அவர் குறிப்பிட்டார்.
சவுஜானா இம்பியான், ஜாலான் ரெக்கோ, கம்போங் புக்கிட் பெடோங், சுங்கை சிக்காமாட் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு காஜாங் நகராண்மைக் கழகத்துடன் தாம் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் கியான் சொன்னார்.
மக்கள் வெள்ளச் பிரச்னையில் சிக்கி அவதியுறுவதை தடுப்பதற்கு ஏதுவாக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளையில் எந்நேரமும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இந்த செயல்குழுவை விரைந்து அமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம் என்றார் அவர்.



