ஷா ஆலம், அக் 30 - அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 450
பேருக்கு இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்ட அனைவரும் கடந்த சனிக்கிழமை
தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள மைடின் பேரங்காடியில் தங்களுக்குத்
தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்து பொது மக்களுடன் உரையாற்றிய
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்நாதன்,
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நடப்புச் சூழலில் மிகவும்
அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்கும்படி
கேட்டுக் கொண்டார். தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும்
தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெருநாள் காலங்களில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச்
சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இந்த பெருநாள் கால
ஷோம் ஷோப்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முன்பு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள்
வழங்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு தொடங்கி அதன் மதிப்பு 200
வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள 56
சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 22,000 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்
விநியோகிக்கப்படுவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு
இம்மாதம் 16ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்நோக்கத்திற்காக மாநில அரசு 44 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், தொகுதியிலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 300 முதல் 600 பற்றுச்சீட்டுகள் வரை விநியோகிக்கப்படுகின்றன என்றார்.








