கோலாலம்பூர், அக் 27: அடுத்த மாதத்தின் மத்தியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்) காலத்தில் மார்ச் 2024 வரை சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
மலை ஏறுதல், முகாமிடுதல், காட்டுக்குள் நடப்பது, நீர்வீழ்ச்சிகளில் குளித்தல் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கை வனத்துறையுடன் இணைந்து கட்டுப்படுத்தப்பட்டது என மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) டைரக்டர் ஜெனரல் டத்தோஸ்ரீ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்.
"குறிப்பாக மழைக்காலங்களில் தொடர்புடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துமாறு மாநில அரசு மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகத்திற்கு நான் அறிவுறுத்துகிறேன்,`` என அவர் 2023 ஜேபிபிஎம் பேரிடர் தயார்நிலை மாதத்தைத் துவக்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அடுத்த மாதம் முதல் பிப்ரவரி 2024 வரை நாட்டில் நான்கு முதல் ஆறு மாதங்கள் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறது. இதனால், ஆபத்தான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம்.
இதற்கிடையில், வெள்ளப் பேரழிவைச் சமாளிக்க ஜேபிபிஎம் நாடு முழுவதும் உள்ள அதன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் 80 சதவீத விடுமுறையை முடக்கும் என்று அப்துல் வஹாப் கூறினார்.
- பெர்னாமா







