கோலாலம்பூர், அக் 23- நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ச்சிகரமான
கருத்துகளை வெளியிடுவதையும் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத
வார்த்தைகளைப் பிரயோகிப்பதையும் அனுமதிக்க முடியாது என்று
மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் நினைவுறுத்தினார்.
இது போன்றச் செயல்களைப் புரிவோர் விஷயத்தில் தாம் சமரசம் செய்து
கொள்ளப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த வார கூட்டத் தொடரின் போது காஃபீர் மற்றும் ஸியோனிஸ்ட்
போன்ற வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்,
நல்லிணத்திற்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் மனம்
புண்படக்கூடிய மற்றும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடிய கருத்துகளை
அவை உறுப்பினர்கள் வெளியிடக்கூடாது என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் போது
இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்புடையதே. ஆனால் சக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது தனி நபர்களுக்கு எதிராக இந்த
வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்றார் அவர்.
நாட்டிலுள் பல்லின மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை ஏற்படுத்தக்கூடிய
இத்தகைய வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை நாடாளுமன்ற நிரந்தர
விதியின் 36(10)(சி) பிரிவு தடை செய்கிறது.
ஆகவே, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய மற்றும்
உணர்ச்சிப்பூர்வமான வகையில் காஃபீர், ஸியோனிஸ்ட் மற்றும் யூதர்கள்
என்ற வார்த்தையை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நாடாளுமன்ற
உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை முன்வைக்கும் போது
மதிப்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டத்தக்க நடத்தையை
வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








