புத்ராஜெயா, அக் 23- கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை
அமைச்சராகத் தாம் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியத்தைத் துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அவர்
சொன்னார். கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் சமூகநல
மற்றும் விளையாட்டு நிகழ்வை நேற்று இங்கு முடித்து வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என நான் நம்புகிறேன்,
காரணம், இது குறித்து பிரதமர் என்னுடன் விவாதிக்கவில்லை என்றார்
அவர்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முடிவெடுப்பது பிரதமரின் ஏகபோக
உரிமை என்பதால் இது குறித்து ஆருடங்களை வெளியிடுவதை
அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாஹிட்
கடந்த 3ஆம் தேதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமைச்சின் ஏற்பாட்டிலான இந்த விளையாட்டுப் போட்டிகள்
குறித்து கருத்துரைத்த அவர், ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்
இந்த நிகழ்வு அடுத்தாண்டிலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வு ஆகக்கடைசியாகக் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
ஆகவே, அடுத்தாண்டிலும் இதனை நடத்தும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்
என்று பங்கேற்பாளர்களின் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.








