கோலாலம்பூர், அக் 23- கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்காகத்
தடுத்து வைக்கப்பட்டுள்ள விமான நிறுவனம் ஒன்றின் இணை
நிறுவனரின் வழக்கில் உதவுவதற்காக வர்த்தகர் ஒருவரை போலீசார்
இன்று அதிகாலை கைது செய்தனர்.
அந்த விமான நிறுவன இணை நிறுவனர் தொடக்கிய நிறுவனம் ஒன்றின்
பங்குதாரரான 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் பங்சாரிலுள்ள தனது
வீட்டில் இன்று விடியற்காலை 1.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலானய்வுத் துறையின் இயக்குநர்
டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
அந்த ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதி ஜிஞ்சாங்கில் உள்ள
ஒருங்கிணைந்த லாக்கப்பில் பெறப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து கருத்துரைத்த ரம்லி,
தடுப்புக் காவலில் இருக்கும் “டத்தோ“ அந்தஸ்து கொண்ட விமான
நிறுவன நிறுவனரிடமிருந்து 12 ஆடம்பரக் கார்கள், அவருக்குச்
சொந்தமான இரு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆறு
விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்.
தடுப்புக் காவல் அனுமதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்த விமான
நிறுவன இணை நிறுவனர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.
ஐம்பத்தேழு வயதான அந்த வர்த்தகர், 55 வயதுடைய அவரின் மனைவி
மற்றும் 26 வயது மகன் ஆகியோர் 2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண
பரிவர்த்தனை, பயங்கரவாத நிதியளிப்புத் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதப்
பொருளீட்டல் சட்டத்தின் கீழ் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஷா
ஆலமில் உள்ள அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.








