ஜொகூர் பாரு, அக் 23- இங்குள்ள தாமான் பூலாய் ஜெயாவில் உள்ள வீட்டில் தங்களுடைய ஏழு வயது மகனை முறையாகப் பராமரிக்காமல் புறக்கணித்ததாக ஆர்.தயாளன்,(வயது 37), மற்றும் கே.மகேஸ்வரி (வயது 26) ஆகியோர் மீது கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a)வது பிரிவு மற்றும் அதே பிரிவின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவின் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 50,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இதனிடையே, அதே சிறுவனுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்ததாக தம்மீது கொண்டுவரப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டை மகேஸ்வரி மறுத்து விசாரணை கோரினார்.
இதன் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். அதே சட்டத்தின் பிரிவு 31 (1) (a) இன் கீழ் தண்டனை வழங்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான உமர் ஃபைஸ் கோஹர் மற்றும் எஸ். திவியா ஆகியோர் வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 6,000 ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி பாத்திமா ஜஹாரி, அவர்கள் தங்கள் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகளைத் அச்சுறுத்தக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளையும் விதித்தார்.
மேலும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமிப்பதற்கு ஏதுவாக இந்த வழக்கை நவம்பர் 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது








