புத்ராஜெயா, அக். 19- சிலாங்கூர் பந்திங் சுங்கை புவாயா மற்றும் பேரா சுங்கை சிப்புட் எல்ஃபில் தோட்டத் தொழிலாளர்கள் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் சைம் டைர்பி மேம்பாட்டு நிறுவனத்துடன் இன்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையை நடத்தினார்.
இவ்விரு தோட்டங்களில் வேலை செய்துக் கொண்டிருக்கும் தோட்டப்பாட்டாளிகள் மற்றும் முன்னாள் தோட்டப்பாட்டாளிகளுக்காக ஒரு லட்சம் வெள்ளியில் தரைவீடுகள் கட்டப்படவுள்ளன.
சுங்கை சிப்புட் எல்ஃபில் தோட்டத்தில் 75 தோட்டப் பாட்டாளிகளுக்கு தரைவீடுகளை கட்டும் பணிகளுக்காக டைம் டைர்பி நிறுவனம் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
அதேசமயம், பந்திங் சுங்கை புவாயா - டூசுன் டுரியான் தோட்டத்தில் 400 தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகளை கட்ட சைம் டர்பி நிறுவனம் 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இவ்விரு தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்புத் திட்டத்திற்காக அரசாங்கம் 50 மில்லியன் அதாவது 5 கோடி வெள்ளியை ஒதுக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டப் பாட்டாளிகள் சொந்த வீடுகளை பெற்றிருக்கும் வகையில் இவ்விரு தோட்டங்களில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தரைவீடுகள் வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
1 லட்சம் வெள்ளியில் இந்த வீடுகளை வாங்கும் தோட்டப்பாட்டாளிகளுக்கு வங்கி மூலம் இரண்டு விழுக்காடு மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
12 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்த வீடமைப்புத் திட்டம் வெற்றிபெற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
சைம் டைர்பி அதிகாரிகள் அளித்த விளக்கத்தை செவிமெடுத்த மனிதவள அமைச்சர் சிவகுமார், இவ்விரு தோட்டத் தொழிலாளர்கள் வீடமைப்புத் திட்டத்தை பெரிதும் வரவேற்றார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
தோட்டப் பாட்டாளிகளுக்கு பயன்தரும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சைம் டர்பி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








