ஷா ஆலம், அக். 19: குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுதைத் தடுக்க பராமரிப்பாளர்களாகப் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு பாதுகாப்புச் சோதனைகளை கடுமையாக்குவதற்கும் கட்டாயமாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை தொடர்பில் சமூக நலத்துறை, உள்துறை அமைச்சு மற்றும் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மகளிர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது குறிப்பிட்டார்.
வருங்கால குழந்தை பராமரிப்பாளர்கள் சைக்கோமெட்ரிக் எனப்படும் உளவியல் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று, அதிகரித்து வரும் குழந்தை துன்புறுத்தல் சம்பவங்களைக் குறைக்க அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெபராவ் தொகுதி உறுப்பினர் ஜிம்மி புவா வீ ஸீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2021 மற்றும் 2022 க்கு இடையில் குழந்தை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மையங்களில் மொத்தம் 336 குழந்தைகள் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக நான்சி கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.
சிறார் வளர்ப்பு இல்லங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பதிவு செய்யப்பட்ட நர்சரிகள், பதிவு செய்யப்படாத நர்சரிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் இச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.








