கோலாலம்பூர், அக் 19- ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்குக்
காரணமாக இஸ்ரேலின் மனிதாபிமனமற்றத் தாக்குதலுக்கு எதிரான
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கடுமையான உரையுடன்
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு (சிப்ஸ்) இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அமிருடின்
அமைதிக்கான மாநிலத்தின் பிளவுபடாத ஆதரவைப் புலப்படுத்தியதோடு
இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களை பயங்கரவாத நடவடிக்கை
என்றும் வர்ணித்தார்.
எனது உரையைத் தொடக்குவதற்கு முன்னர் பாலஸ்தீனத்திற்கு எதிராக
மேற்கொள்ளப்படும் பயங்கரமான மற்றும் முற்றிலும் நேர்மையற்ற
தாக்குதல்களைப் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். தங்களைத்
தற்காத்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள மக்களை குறிப்பாகப்
பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்களை முற்றிலுமாகத்
துடைத்தொழிப்பதில் இஸ்ரேல் முனைப்புடன் உள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளை குறிப்பாக மருத்துவமனைகள், வழிபாட்டுத்
தலங்கள் மற்றும் வீடுகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை
நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை சிலாங்கூர் மாநில மக்கள்
சார்பாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.
அமைதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட விரும்பும் அனைத்துத்
தரப்பினருடனும் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். அர்த்தமற்ற
வார்த்தைகளால் மட்டுமின்றி அர்த்தமுள்ள செயல்கள் வாயிலாகவும்
எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்கிறோம் என்றார் அவர்.
இன்று காலை இங்கு 2023ஆம் ஆண்டு சிப்ஸ் மாநாட்டைத் தொடக்கி
வைத்து அவர் ஆற்றிய இந்த உரையை நிகழ்வில் கலந்து கொண்ட
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.








