கோலாலம்பூர், அக் 19 - போதைப்பொருள் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு ஆலோசக சேவைகளை வழங்குவதில் ஒத்துழைக்க அரசு சாரா அமைப்புகளை சிறைத்துறை ஊக்குவித்து வருகிறது.
சிறைச்சாலைகளில் மனநல வசதிகளை அதிகரிக்க இந்த ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என்று சிறைத் துறையின் துணை ஆணையர் (சமூகம்) டத்தோ இப்ரிசாம் அப்துல் ரஹ்மான் கூறினார்.
போதைப்பொருள் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு மனநல மேலாண்மை திட்டங்கள் மற்றும் உளவியல் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்படுவதை நான் பெரிதும் ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது அவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற உளவியல் மாநாட்டில் கூறினார்.
போதைப்பொருள் துஷ்பிரயோக விவகாரங்கள் மீது தீவிர கவனம் தேவைப்படுகிறது, ஏனெனில் இது நன்நடத்தை மற்றும் மனநலப் பிரச்சனைகளை உள்ளடக்கியது. இது சிலருக்கு மாயத்தோற்றம் மற்றும் வன்முறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.
ஊக்க மருந்துகள் மனநல கோளாறுகளுடன் முக்கியத் தொடர்புடையவையாக உள்ளன. போதைக்கு அடிமையானவர்கள் மனச்சோர்வு, பித்து பிடித்தல், நடத்தையில் மாற்றம் மற்றும் வன்முறை குணம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடலாம் என அவர் மேலும் சொன்னார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில், 1,574 கைதிகளுக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மாயத்தோற்றம், அமானுஷ்யக் குரல்களைக் கேட்பது மற்றும் ஆக்ரோஷமாக செயல்படுவது ஆகியவை போதைக்கு அடிமையானவர்கள் அனுபவிக்கும் விளைவுகளாகும் என்று இப்ரிசம் கூறினார்.
இப்பிரச்னைகளைக் களைய பல்வேறு செயல்முறைகள் மூலம் மனநலச் சேவைகளை சிறை இலாகா வழங்குவதாகக் கூறிய அவர், இதில் தகுதி வாய்ந்த உளவியலாளர்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் ஆலோசகச் சேவைகளும் அடங்கும் என்றார்.








