கோலாலம்பூர், அக் 18- வேளாண்மையை குறிப்பாக அரசி உற்பத்தியை
அதிகரிக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடப்பிலுள்ள
திட்டங்களை மேம்படுத்துவதற்கும் விவசாய மற்றும் உணவு உத்தரவாத
அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
விவசாயத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது
மற்றும் புதிய நெல் பயிரீட்டுப் பகுதிகளை அடையாளம் காண்பதும் அதில்
அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் தாக்கல் செய்த
2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி
ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த முன்னெடுப்புகள் அமல்படுத்தப்படும் என
அவ சொன்னார்.
நடப்பிலுள்ள அதே அளவிலான நிலத்தில் உற்பத்தியின் அளவை
அதிகரிப்பதற்கு சிறப்பான மற்றும் ஆக்ககரமான புதிய திட்டங்களை
அமல்படுத்தவும் நடப்பிலுள்ள திட்டங்களை மேம்படுத்தவும் நாங்கள்
திட்டமிட்டுள்ளோம். புதிய தொழிநுட்பத்தின் வாயிலாக உற்பத்தியைப்
பெருக்க விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே அளவிலான நிலத்தில் உற்பத்தியின் அளவைப் பெருக்குவதற்கு
உயர்கல்விக்கூட விரிவுரையாளர்களுடன் விவாதித்து வருவதோடு
நிலத்தின் தன்மை குறித்தும் ஆய்வும் மேற்கொண்டு வருகிறோம். அதே
சமயம் நெல் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுவதற்கு தேவையான புதிய
நிலங்களை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்
என்றார் அவர்.
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாய மற்றும் உணவு
உத்தரவாத அமைச்சுக்கு 617 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது ஒதுக்கப்பட்ட 539 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 14.4 விழுக்காடு அதிகமாகும்.








