புத்ராஜெயா, அக் 18- எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரங்கானுவில் உள்ள
பள்ளி ஒன்றில் பகடிவதைக்குள்ளாகி செவித் திறனை இழந்த
இளைஞருக்கு 600,000 வெள்ளியை இழப்பீடாக வழங்கக் கூட்டரசு நீதிமன்றம்
நேற்று உத்தரவிட்டது.
அந்த முன்னாள் மாணவர் அடித்து துன்புறுத்தப்பட்டு பகடிவதை
செய்யப்பட்டச் சம்பவத்திற்குப் பள்ளியின் ஐந்து முன்னாள் மாணவர் உள்பட
ஒன்பது பிரதிவாதிகளுமே பொறுப்பு என கூட்டரசு நீதிமன்றம் முடிவு
செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் வழக்கறிஞரான நிக் நுர்
ஷியாஸ்வானி நிக் சுஹாய்மி கூறினார்.
பள்ளியின் வார்டன், மாணவர் விவகாரத் துணைத் தலைமையாசிரியர்
மற்றும் பள்ளியின் முதல்வரின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த
இச்சம்பவத்திற்குக் கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் மற்றும் மலேசிய
அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளும் பொறுப்பு என
நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது என அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கோல திரங்கானு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏகமனதாக
ஏற்றுக் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த
மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவையும் தள்ளுபடி செய்தது
என்றார் அவர்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கில் பெயர் குறிப்பிட்டப்பட்டுள்ள
அனைத்துப் பிரதிவாதிகளும் வாதிக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும்
எனவும் அவர் சொன்னார்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்
போது, மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான்ஸ்ரீ அமார் அபாங்
இஸ்கந்தார் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ மேரி லிம்
தியாம் சுவான், டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜாலீல் தலைமையிலான நீதிபதிகள் குழு அந்த இளைஞரின் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்டது என்று நிக் நுர் கூறினார்.








