புத்ராஜெயா, அக் 18- காஸா தீபகற்பத்திலுள்ள மருத்துவமனை ஒன்றின்
மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதல் பைத்தியக்காரத்தனமானது என்பதோடு சிறிதும் மனிதாபிமானமற்றது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும்
தெரிவித்த அவர், பாலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடி வரம்பு மீறிவிட்டதோடு
அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
யார் என்ன குற்றஞ்சாட்டினாலும் இது தாக்குதல் மற்றும் போரின்
விளைவு என்பதைக் காட்டுகிறது. ஆகவேதான் இதனை நிறுத்த
வேண்டும் என நாம் கோருகிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்ந்தால் பாதிக்கப்படுவது பெண்கள், சிறார்கள்
மற்றும் நோயாளிகள்தான். மனிதாபிமானமற்ற மற்றும்
பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தை எட்டிவிட்டதை இச்சம்பவம்
காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற “மலேசியாவில் மகத்தான சுபிட்சத்திற்கான
வழி“ எனும் ஆய்வரங்கில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதன் தெரிவித்தார்.
காஸாவின் மத்தியில் அமைந்துள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது
நேற்று மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 500 பேர்
கொல்லப்பட்டதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு கூறியது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த உலக சுகாதார
நிறுவனம், பாலஸ்தீன நெருக்கடி தொடங்கியது முதல் நிகழ்ந்த மிக
மோசமான இரத்தக்களரிச் சம்பவம் இதுவென வர்ணித்தது.
காஸா நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காகப் பல்வேறு நாடுகளின்
தலைவர்களுடன் சந்திப்பு நடத்துவது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக
பிரதமர் நேற்று கூறியிருந்தார்.








