ஷா ஆலம், அக் 18- மனிதாபிமான மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு
கொண்ட 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோரை தன்னார்வலர்
குழுக்களில் சேர்ந்து பணியாற்ற அழைக்கிறது செர்வ் எனப்படும்
சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு.
மழைக்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும்
தங்களுக்கு 50 முதல் 100 புதிய தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம்
மர்ஜூக்கி கூறினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எங்களுக்கு
மேலும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பேரிடர் எந்த
நேரத்திலும் ஏற்படலாம். அது வெள்ளமாகவும் இருக்கக்கூடும். அதனால்
மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
திடீர் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் நமக்கு 50 தன்னார்வலர்கள் வரை
தேவைப்படுவர். உடனடியாக அவர்களை திரட்டுவது சிரமம், ஆகவே, இந்த
அமைப்பில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
விடுக்கிறோம் என்றார் அவர்.
இந்த குழுவில் இணைந்து பணியாற்றுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ்
வழங்கப்படும். மேலும் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன்
மூலம் அவர்கள் அனுபவத்தைப் பெற இயலும் என்றும் அவர் மேலும்
சொன்னார்.
இந்த தன்னார்வலர் அமைப்பில் இணைந்து பணியாற்ற விரும்புவோர்
https://tinyurl.com/ServeSelangor என்ற இணைப்பின் வாயிலாக விண்ணப்பம்
செய்யலாம்.








