கோல லங்காட், அக் 17- புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்புத்
திட்டத்தின் வழி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 3,256 சிறு வர்த்தகர்கள் 1
கோடியே 36 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வர்த்தக உபகரணங்களைப்
பெற்றுள்ளனர்.
இத்திட்டத்திற்கு இவ்வாண்டில் இதுவரை ஒன்பது மாவட்டங்களைச்
சேர்ந்த 334 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வறுமை
ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு
கூறினார்.
இன்றைய நிகழ்வில் கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 90 பேர்
687,200 வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்களைப் பெற்றனர் என்று
அவர் தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கோல லங்காட் மாவட்டமே உதவிப்
பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக விளங்குகிறது என்று அவர்
சொன்னார்.
கோல லங்காட் மாவட்ட நிலையிலான புளுபிரிண்ட் உதவித் திட்ட
பயனாளிகளுக்கு வர்த்தக உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார். கடந்த 2021 முதல் 639 இந்திய தொழில் முனைவோர்
வர்த்தக உபகரணங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும் தொழில்
முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாக வர்த்தக உபகரண உதவித்
திட்டத்திற்கு மாநில அரசு 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியைச்
செலவிட்டுள்ளது என அவர் சொன்னார்.
இவ்வாண்டில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 175 விண்ணப்பங்கள்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கோல லங்காட் மாவட்டதில் மட்டும் 20 தொழிலமுனைவோர் 142,480 வெள்ளி மதிப்பிலான உபகரணங்களைப் பெற்றனர் என்றார் அவர்.
அடுத்த மாதம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய்யப்படவிருக்கும்
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வறுமை ஒழிப்பு
புளுபிரிண்ட் திட்டம் மற்றும் ஐ-சீட் திட்டங்களுக்கு மாநில அரசு நிதி
ஒதுக்கீட்டை வழங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார்.








