MEDIA STATEMENT

பிரதமர் அன்வாருக்கு ஆதரவு- பெர்சத்து எம்.பி. அறிவிப்பு

13 அக்டோபர் 2023, 3:52 AM
பிரதமர் அன்வாருக்கு ஆதரவு- பெர்சத்து எம்.பி. அறிவிப்பு

கோலாலம்பூர், அக்.13-  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின்  கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கந்தர் ஜூல்கர்னைன் அப்துல் காலிட்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தலைமையிலான அரசாங்கத்திற்கு தனது ஆதரவைப் புலப்படுத்தியுள்ளார்.

வாக்காளர்களின் தொடர்ச்சியான புகார்களை ஆய்வு செய்தும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியும்  இந்த முடிவைத் தாம் எடுத்ததாக  அவர் கூறினார்.

நாடு சுபிட்சமடைவதற்கும்  மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கும்  பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பிரதமரின் முயற்சிகளுக்கு நான் ஆதரவளிப்பேன்  என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விசுவாசக் கோட்பாட்டின் அடிப்படையில் எந்த சூழ்நிலையிலும் தனது கட்சியான பெர்சத்துவை விட்டு வெளியேறி காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று இஸ்கந்தர் கூறினார்.

தனது  இந்த முடிவினால் கட்சியின் ஒழுங்கு  நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற போதிலும், அரசியல் பூசல்கள் காரணமாக தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் பின்தங்கியிருப்பதையும் புறக்கணிக்கப்படுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள  முடியாது என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறேன் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் இஸ்கந்தர் 14,380 வாக்குகள் பெற்று நான்கு முனைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.