இந்தியர்கள் காலம் காலமாக குடியுரிமை பிரச்சனையை எதிர் நோக்கி வருகிறார்கள். இதற்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் உள்துறை அமைச்சுகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
இந்தியர்கள் குடியுரிமை பிரச்சனைகள் தொடர்பாக இன்று மனித வள அமைச்சின் அலுவலகத்தில் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய பதிவு இலாகா அதிகாரிகளுடன் மனித வள அமைச்சர் வ சிவகுமார் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார்.
மனிதவள அமைச்சு இப்போது நாடு தழுவிய அளவில் ஜெலாஜா மடாணி நிகழ்வை நடத்தி வருகிறது.
இதன் மூலம் இல்லத்தரசிகளுக்குச் சொக்சோ காப்புறுதி திட்டம், சொக்சோ இழப்பீடு பெறுவது, மாணவர்களுக்கு எச்ஆர்டி கோர்ப் தொழில் திறன் கல்வி, வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் மக்களுக்கு உதவி வருகிறது.
மனிதவள அமைச்சு நடத்தி வரும் ஜெலாஜா மடானி நிகழ்வில் குடியுரிமை பிரச்சனைக்கு தீர்வு காண தேசிய பதிவு இலாகா முகப்பிட சேவை மையம் ஏற்படுத்தி தரப்படும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வு காண மனிதவள அமைச்சர் சிவகுமார் முன் வைத்த கோரிக்கையை ஏற்று முழு ஆதரவு வழங்குவதாக தேசிய பதிவு இலாகா இயக்குனர் துவான் ஜம்ரி தெரிவித்தார்.
ஜெலாஜா மடானி நிகழ்வுகளில் தேசிய பதிவு இலாகா சார்பில் முகப்பிடம் அமைக்கப்படும் என்றார்.
இதை பெரிதும் வரவேற்பதாக குறிப்பிட்ட அமைச்சர் சிவகுமார், இதன் மூலம் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் மனித வள அமைச்சினால் நடத்தப் படும் ஜெலாஜா மடாணி நிகழ்வில் குடியுரிமை பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கும் இந்தியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணலாம் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
குடியுரிமை பிரச்சனை குறித்து மனித வள அமைச்சின் சார்பில் சொக்சோ அதிகாரி கே. மகேசன் நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








