கோலாலம்பூர், அக் 12- மின்சாரம், நீர், உணவு, எரிவாயு உள்ளிட்ட
அடிப்படைத் தேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் இஸ்ரேலின்
நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவுவதற்கு
மலேசிய எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இன்றைய அமைச்சர் கேள்வி பதில் அங்கத்தின் போது இதன் தொடர்பான
கேள்வியை பக்ரி தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர டான்
ஹோங் பின் எழுப்புவார் என்று அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் புகை மூட்டப் பிரச்சனை தொடர்பான கேள்விகளும்
முன்வைக்கப்படும். மலேசியர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை
ஏற்படுத்திய புகைமூட்டப் பிரச்சனைக்கு காரணமான அண்டை நாட்டிற்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டங்கள் குறித்து பாகான்
செராய் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ இட்ரிஸ் அகமது
இயற்கை வளம், சுற்றுசூழல் மற்றும் பருநிலை மாற்ற அமைச்சரிடம்
வினா தொடுப்பார்.
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கடவுச் சொல்லை
ஊடுருவவும் தகவல்களைக் கசியச் செய்யவும் பணத்தை மோசடிச்
செய்யவும் கூடிய இணையத் தாக்குதல்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம்
மற்றும் அதன் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பண்டார் துன் ரசாக் தொகுதி
பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான்
இஸ்மாயில் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார்.
வர்த்தகம் புரிவதற்கான இடம் இல்லாத சிறு வணிகர்களுக்குப்
பொருத்தமான இடங்களையும் வர்த்தக உரிமத்தையும் பெற்றுத்
தருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து ஊராட்சித் துறை
மேம்பாட்டு அமைச்சரிடம் லிபரான் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர்
டத்தோ சுஹைமி நாசீர் விளக்கம் கோருவார்.








