கோலாலம்பூர், அக் 11- கடுமையான மழை காரணமாக தலைநகர், சௌகிட், கம்போங் பெரியோக்கில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புத்ரி விலாயா தேசிய பள்ளியில் தற்காலிக நிவாரண மையம் அமைக்கப்பட்டு 19 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை இதர மீட்பு நிறுவன உறுப்பினர்கள் துணையுடன் எட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப் படுத்தியதாக தித்திவங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி முகமது ரிடுவான் அக்யார் கூறினார்.
நேற்று மாலை தலைநகரில் கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் நீர் வெகு வேகமாக உயர்ந்து வருவதைக் கண்டனர் என்று அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவரும் தற்காலிக நிவாரண மையங்களில் சேர்க்கப்பட்டனர். மழை நின்றதும் நீர் வடியத் தொடங்கியது என்று அவர் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எட்டு ஆண்களும் நான்கு மூத்த குடிமக்கள் உள்ளிட்ட 11 பெண்களும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.








