கோலாலம்பூர், அக் 10 - மலேசியா மற்றும் தாய்லாந்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் தொடர்பான பிரச்சனைகள் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் நாளை நடைபெறும் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தாய்லாந்து பிரதமர் மலேசியாவுக்கு இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு நாளை காலை இங்கு வர உள்ளார்.
இரு நாடுகளிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க உதவும் நடவடிக்கைகள் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
நாங்கள் (மலேசிய அரசாங்கம்) தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் உட்பட மக்களின் சுமையை குறைக்க பாடுபடுகிறோம். இந்தப் பிரச்சனை உலகளவில் நடக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள மற்ற தலைவர்களுடனான எங்கள் கலந்துரையாடல்களைப் போலவே தாய்லாந்து பிரதமருடனும் (பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கைகள்) நாளை அல்லது மறுநாள் இது குறித்து விவாதிக்கப்போம் என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
ரிங்கிட்டின் மதிப்பு சரிவைத் தொடர்ந்து மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறைகள் குறித்து பெண்டாங் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2024 பட்ஜெட்டில் மக்களின் சுமையை குறைக்க உதவும் பல நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றுப் பிரதமர் கூறினார்.
உணவு மானியங்களுக்கான அரசாங்க செலவினங்களின் தாக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்வார், உணவுக்கான உதவித் தொகை இதுவரை 8,100 கோடி வெள்ளியை எட்டியுள்ளதாகவும் இது அசல் மதிப்பீட்டான 6,700 கோடி வெள்ளியைவிட அதிகம் என்றும் தெரிவித்தார்.








