ஜகார்த்தா, அக். 6: இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தனில் ஏற்பட்டுள்ள காடு மற்றும் நில மேம்பாட்டு பகுதி தீயின் காரணமாக கடுமையான காற்று மாசுபாடு நிகழ்ந்துள்ளது. இதனால், அங்கு 10 நாட்களுக்கு அவசரகால நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று ஆளுநர் எச்.சுகியாண்டோ சப்ரான் தெரிவித்தார்.
அடர்ந்த புகை காரணமாக அக்டோபர் 2 ஆம் தேதி 1,500 மீட்டருக்கு குறைவாகப் பார்வைத் திறன் குறைந்து, அக்டோபர் 3 ஆம் தேதி காற்று மாசுக் குறியீடு ஆபத்தான நிலையை எட்டியது என்றார்.
"ஜனவரி 1 முதல் அக்டோபர் 2 வரை சேகரிக்கப்பட்ட தரவு, இப்பகுதியில் மொத்தம் 38,104 ஹாட்ஸ்பாட்கள் கண்டறியப் பட்டதைக் காட்டுகிறது.
"இதனால் 3,230 காடுகள் மற்றும் நில மேம்பாட்டு பகுதி தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீயை அணைக்கும் முயற்சிகள் இதுவரை 9,137 ஹெக்டேர் நிலத்தை எட்டியுள்ளன" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சிக்கலைச் சமாளிக்க, அதிகாரிகள் 110 பில்லியன் ரூப்பியாவை (சுமார் 33 மில்லியன் ரிங்கிட்) தீயணைப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் சுகாதார சேவைகளை வழங்கவும் ஒதுக்கியுள்ளனர்.
– பெர்னாமா








