டுங்குன், அக் 6 - ஆறு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில்
மூவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயங்களுக்குள்ளாயினர்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் கிழக்குக் கரை
நெடுஞ்சாலை 2இன் 333.1வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் முகமது ஷா ருன் நிஷாம் ஜாபர் (வயது 20), முகமது
ஃபித்ரி ஹனிப் ரோஹாமி (வயது 18), அகமது ஓசாமா ரமாட்ஹான்
லாய்டின் (வயது 20) ஆகிய மூவரும் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட
பலத்த காயங்கள் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் மைஸூரான
அப்துல் காடீர் கூறினார்.
முகமது ஃபிரானி ஹில்மான் (வயது 20), முகமது ஹனிப் ஹைக்கால்
(வயது 17) மற்றும் முகம்து அக்கிப் கமால் (வயது 19) ஆகிய மூவரும்
வலது காலில் பலத்த காயங்களுக்குள்ளானதாக அவர் சொன்னார்.
முகமது ஃபிரானி பயணம் செய்த மோட்டார் சைக்கிளைப் பின்னால் வந்த
மோட்டார் சைக்கிள் மோதியதைத் தொடர்ந்து அவர்கள் கீழே விழுந்ததாக
அவர் தெரிவித்தார். அச்சமயம் பின்னால் குழுவாக வந்து கொண்டிருந்த
மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலையில் விழுந்து கிடந்தவர்கள் மீது
மோதினர் என்றார் அவர்.
அவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலையின் பாக்கா, ஓய்வு பகுதியில்
உள்ள நாசி லெமாக் கடையில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு
திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் மேலும்
குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்று அவர் தெரிவித்தார்.








