கோலாலம்பூர், அக் 6- இங்குள்ள செராஸ், சான்சலர் துங்கு முக்ரிஸ்
மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் சுமார் எட்டு
மணி நேரம் கைவிடப்பட்டபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு மாதப் பெண்
குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவரான அந்த குழந்தையின் தாய் பராமரிப்பு மையத்தில்
சேர்ப்பதற்காக அக்குழந்தையை நேற்று காலை 7.20 மணியவில் காரில்
அழைத்து வந்ததாகச் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம்
ஹலிம் ஜமாலுடின் கூறினார்.
பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதற்காக அந்த குழந்தையை மருத்துவர்
தனது காரின் பின்புற இருக்கையில் கிடத்தியுள்ளார். எனினும், அந்த
குழந்தை காரிலியே இருந்த நிலையில் பராமரிப்பு மையத்தில்
அக்குழந்தையைச் சேர்த்து விட்ட நினைப்பில் அவர் நேராக
மருத்துவமனைக்கு வந்து விட்டார் என ஏசிபி ஸாம் சொன்னார்.
குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்படவில்லை என்றத் தகவலை
அன்று மாலை தன் கணவரின் மூலம் அறிந்தப் பின்னரே குழந்தை காரில்
இருப்பதை தாயார் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட மருத்துவரின் அந்த கடைசி குழந்தை உயிரிழந்து விட்டதை
மருத்துவமனையிலுள்ள மருத்துவ அதிகாரிகள் நேற்று மாலை 5.53
மணியளவில் உறுதி செய்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த குழந்தையும் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் இச்சம்பவம் தொடர்பில்
தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தாங்கள் திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளதாகக்
கூறிய அவர், குழந்தை பராமரிப்பில் அலட்சியமாகச் செயல்பட்டது
தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(எ) பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.








