ஹாங்ஸோவ், செப் 26- இங்குள்ள கோங்ஸூ கெனால்
விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் நாட்டின்
தேசிய அணி ஓமான் நாட்டை 11-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்கான
வாய்ப்புகளை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது.
இந்த பி பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர் முகமது
அஷ்ராம் ஹஸ்மானி (வயது 28) மூன்று கோல்களை அடித்து சாதனைப்
படைத்தார்.
உலகின் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கும் மலேசிய ஹாக்கி
அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி கோலை போட அதிக நேரம்
தேவைப்படவில்லை. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில்
பெனால்டி கார்னர் மூலம் ராஸி அப்துல் ரஹிம் முதல் கோலை போட்டி
மலேசிய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.
மலேசிய வீரர்களின் தொடர்ச்சியான அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க
முடியாமல் உலகத் தர வரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ஓமான்
பெரிதும் சிரமப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை ஓமானுடன் எட்டு ஆட்டங்களில்
மோதியுள்ள மலேசிய அணிக்கு இதுவே மகத்தான வெற்றியாக
விளங்குகிறது. கடந்த 2022 ஆசியக் கிண்ணப் போட்டியின் போது
அந்நாட்டை மலேசிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அந்த ஆட்டத்தின் தரம் குறித்து கருத்துரைத்த குழு
பயிற்றுநர் ஏ.செல்வராஜ், மலேசிய அணி மகத்தான வெற்றியைப்
பெற்றிருந்தாலும் ஆட்டத் திறனை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது
என்றார்.
இரு தினங்களுக்கு முன்னர் தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்து குழுவை 6-0
என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் வழி மலேசிய அணி ஆறு
புள்ளிகளை முழுமையாகப் பெற்றுள்ளது.








